தற்போதைய செய்திகள்

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (03) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நம்பிக்கை உள்ள வீட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசதி குறைந்த 1200 தோட்டங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் குறைவடைந்த மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெற்றோல் விலை மாத்திரம் குறைப்பட்ட போதிலும் டீசல் விலை குறைக்கப்படாமைக்கு காரணம் என்னவென்று பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் சபையின் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மசகு எண்ணெய் சுத்தகரிப்பின் மூலம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 30 சதவீதம் மாத்திரமே ஈடுசெய்யப்படுகிறது 70 சதவீதம் நேரடி முடிவுப்பொருளாக எரிபொருள் இறக்குமதிசெய்யப்படுகிறது.

அந்த 30 சதவீதத்தினுள், டீசல் , பெற்றோல், விமானத்துக்கான எரிபொருள், மண்ணெண்ணெய், நெப்தா மற்றும் உலை எண்ணெய் உள்ளிட்ட 6 பொருட்கள் உள்ளடங்கும்.

எனவே, குறைவடையும் மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் குறைக்க முடியாது.

முன்னதாக பல அரசாங்கங்கள் சலுகை விலையில் டீசல் வழங்கிவந்தது. தற்போது, சலுகை நீக்கப்பட்டு இறக்குமதி விலைகேற்க வழங்கப்படுகிறது.

கடந்த காலங்களில் டீசல் இறக்குமதியில் லீற்றர் ஒன்றுக்கு 30சதவீதம் நட்டம் நிலவிவந்தது. தற்போது நட்டத்துக்கு மாறாக ஒரு ரூபா அளவில் இலாபம் ஏற்பட்டுள்ளது.

எனினும், 5 - 10 ரூபா வரை விலை குறைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அடுத்த எரிபொருள் அளவை எம்மால் கொள்வனவு செய்யமுடியாது.

தற்போது, மண்ணெண்ணெய்யோ அல்லது வேறு பெற்றோலிய உற்பத்திகளின் விலையையோ குறைப்பு செய்தால் நஷ்டம் ஏற்படும்.

எனினும், பெற்றோல் இறக்குமதியில் அண்மைய காலங்களில் லீற்றருக்கு 70 ரூபா அளவில் இலாபம் ஏற்பட்டது. எனவேதான் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது. உலக சந்தையின் விலைகுறைப்பின் பலனை 30 நாட்களின் பின்னரே நாம் அனுபவிக்க முடியும்.

எனவே, குறைவடையும் மசகு எண்ணெய் விலைக்கேற்ப எதிர்வரும் காலங்களில் எரிபொருட்களின் விலைகளை மேலும் குறைக்க முடியுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள தொழில் வல்லுநர்கள் முறையான முறையில் வரி செலுத்தியிருந்தால், இலங்கையின் பொருளாதாரத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு வைத்தியர் தனது தொழிலில் குறைவான வரியை செலுத்துவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொழில் வல்லுநர் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருந்தாலும், அவர்கள் எவ்வளவு செலுத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு சென்றால், அவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் வரி செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தரப்பினர் வேறொரு நாட்டுக்கு வரி செலுத்துவதாகவும் குறைந்த பட்சம் அந்த வரித் தொகையையாவது இலங்கைக்கு செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி வருமானம் குறைவடைந்தமையே இலங்கை எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை எனவும், இதன்காரணமாக அரசாங்கம் அடிப்படைத் தேவைகளுக்கு செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த காரணங்களுக்காக வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் வல்லுநர்கள் உட்பட அனைவரும் வருமான வரி செலுத்தியிருந்தால் இன்று இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரிய நேரத்தில் உரம் வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலனறுவை விவசாயிகள் இணைந்து இன்று காலை பொலனறுவையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து கொண்டு வீதியில் அமர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை வழங்குமாறும் கோரி முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிலர் கூறுவதைப் போன்று நாட்டில் மந்தபோஷணை பிரச்சினை இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். உணவுப் பணவீக்கம் காரணமாக ஒரு குடும்பத்தின் உணவு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர், இதன் மோசமான விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவில் ஏற்பட்ட மாற்றங்களால், நாட்டு மக்களின் ஊட்டச்சத்து நிலை வீழ்ச்சியடைந்து, அதிக ஊட்டச்சத்து குறைபாடு திடீரென உருவானது என்பதை நம்ப முடியாது என்றும் 85 சதவீத மந்தபோசணை குறைபாடு பற்றிய கதைகள் அப்பட்டமான பொய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்கள் பலர், 2வது அமர்வின் பின்னர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 98 நாட்களே உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நியாயமான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி நீங்காவிட்டாலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் குறைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இந்நிலையில், மீண்டும் ஜூலை 18ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர, புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் அறிவித்துள்ளார்.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கிடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வாழ்க்கைச் செலவு தொடர்பான உபகுழு பின்வருமாறு அமையும்.
  1. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ (தலைவர்)
  2. பிரதமர் ரணில் விக்ரமசிங்க
  3. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
  4. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன
  5. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர
  6. பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண
  7. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
  8. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோ

அதேபோல், மேற்குறிப்பிட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களின் தலைமையில் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் கடன் மீளமைப்பு அறிக்கை ஓகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், அது சாத்தியமில்லைாத விடயமாகும், அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும், ஜனாதிபதியிடம் அந்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும, அனுர குமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் “GO HOME GOTA” என்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் கோஷமிட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் எதிர்கட்சியினர் இவ்வாறு கோஷமிட்டதை அடுத்த சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.